புதன், 2 டிசம்பர், 2009

கேள்வி - 1

உலகத்துல உள்ள பெரும்பாலான சமுகங்கள் போல நம்மளோட தமிழ் சமூகமும் ஆண் ஆதிக்க சமுகம் தான். நண்பர் ஒருவர் பெண் அடிமைப் பற்றி அனுப்பிய ஒரு மடலை வாசிக்கையில் ஒரு கேள்வி எழுந்தது,

ஆண்டு, ஆண்டவன் என்கின்ற சொற்களுக்கும், ஆண் ஆதிகத்துக்கும் தொடர்பு உண்டா?

பதில் தெரிந்தாலோ இல்லாட்டி ஏதாவது தோனுச்சுனா சொல்லுங்கப்பா.

சனி, 14 நவம்பர், 2009

பேசும் படம்

இந்த புகைப்படத்தை பற்றி சொல்ல எதுவும் இல்லை, பார்த்தாலே போதும்.

தினமலரில் வந்த படம்.

புதன், 13 மே, 2009

நாகரிகத்தைக் காணவில்லை, எங்கு தொலைத்தோம்? உங்களுக்கு தெரியுமா?

ஏழு வாரங்களுக்கு முன்னர், என்னுடைய நண்பன் ஒருவன் சென்னையில் ஒரு கட்டிட விபத்தில் துர்திஷ்ட்ட வசமாக காலாமாகிவிட்டான். மிகவும் பாசத்தோடும், கலகலப்போடும் இருக்கும் அவனது இழப்பினை என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. "அண்ணா, அண்ணா" என்று வாயார கூப்பிடும் குறள் என் மனதில் ரீங்காரமிட்டு கொண்டே இருந்தது, இருக்கிறது. கடந்த பத்து வருடங்களில் என்னை மிகவும் பாதித்த ஒரு சம்பவத்தில் இதுவும் ஒன்றாகும்.

ஒருவருடைய இழப்பே எப்படி நம்மை உலுக்கி விட்டதே, ஈழத்தில் இருக்கும் எமது மக்களின் நிலை இப்படி இருக்கும் என்று தீடிர் தீடிரென்று மனம் எண்ணிப் பார்த்து கொண்டே இருக்கிறது. அப்படி எண்ணும் பொழுதெல்லாம் ஒரு அழகான வனத்தை நொடிப் பொழுதில் சூரையாடிவிடும் காட்டு தீயைப் போல் மனதில் ஒரு சோகம் சட்டென்று பரவுகிறது.

கிட்டத்தட்ட கடந்த ஒரு வருட காலாமாக எப்பொழுது தனிமை கிடைத்தாலும், எங்கோ ஆரம்பித்தாலும் கடலினை சென்றடையும் நதியினைப் போல், எனது எண்ணங்கள் ஈழத்தை நோக்கியே செல்கிறது. நதியின் நீர் இவ்வளவு தான் இனிமையாக இருந்தாலும், கடலை சென்றடைந்த பின்னர் உப்பு கரிப்பது போல், ஈழத்தை நோக்கி எண்ணங்கள் செல்லும் பொழுது மனதில் ஒரு வெறுமை அப்பிக் கொள்கிறது.

ஈழத் தமிழன் என்ன பாவம் செய்தான்? ஈழத்தில் தமிழனாக பிறந்தது ஒரு குற்றமா? தனது அடிப்படை உரிமைகளை கேட்டது ஒரு குற்றமா? அதை அகிஹம்சை முறையில் கேட்டான், அவனது குறள் எடுபடவில்லை. ஒருவருடம், இருவருடமல்ல இருப்பது ஆண்டு காலத்திற்கு மேல் எவ்வளவு வலியுற்றாலும், நிதானத்தோடு கேட்டுப் பார்த்தான், நிலமை மோசமாகிக் கொண்டே வந்தது ஒழிய, பலனேதும் இல்லை.

எங்கெல்லாம் அடிப்படை உரிமைகள் மறுக்கப் படுகிறதோ அங்கெல்லாம் வன்முறை தலை தூக்கும் என்பது நிதர்சனமான் உண்மை.

பாலதினத்தில் நடந்தது போல், வியட்நாமில் நடந்தது போல் அவனும் ஆயுதம் ஏந்தினான். அதை தீவரவாதம் என்று பழித்தார்கள். அடே பதர்களே, அவனது வாதத்தை தீவிரமாக எடுத்து வைத்தான், அது தவறா?

முப்பது வருடக் காலம் ஒரு இனம் தங்களது உயிர்களை பற்றி கவலையில்லாமல், எந்த ஒரு பொருட் பிரதிபலனையும் எதிர்பாராமல், எனது இனம் நிம்மதியாக வாழ ஒரு இடம் கிடைக்குமென்றால் எமது உயிர்கள் ஒரு பொருட்டல்ல ன்று போராடி வருவது ஏன் எவருக்கும் புரியவில்லை? எந்த ஒரு மனிதனாவது விளையாட்டுக்கு உயிர் விட துணிவானா?

ஈழத்தமிழர்க்ளது உரிமை மறுக்கப்படாமால் இருந்திருந்தால், அவர்கள் ஆயுதம் ஏந்தும் ஒரு நிலை ஏற்பட்டிருக்குமா?

இன்னொரு கொடுமை என்னவென்றால், தமிழ் நாட்டில் வாழும் மிகுதியான் மக்களுக்கு ஈழப் பிரச்சனை என்றால் என்னவென்றே என்னும் சரியாக தெரியவில்லை. இத்தனை மனிதர்கள் மாண்டு வருகின்றார்கள், அப்படி என்ன தான் அங்கு நடக்கிறது என்று யோச்சிக்கும் அறிவு கூட இல்லை. "எனக்கு நேரடி பாதிப்பு எதுவும் இல்லப்பா, நான் எதுக்கு கவலை படனும்?" என்று கேட்பவர்கள் தான் அதிகம். ஆமாம் இவர்களுக்கு இந்தியாவில் நடக்கும் மற்ற பிரச்சனைகள் மட்டும் என்ன தெரிகிறதாக்கும், கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு இந்த மாக்கள், இல்லை இல்லை மாக்கள் எவ்வளவோ மேல், மனிதர்களிடம் இதை நான் எதிர்ப்பார்த்து விட்டேன்.

நாகரிகத்தை பூதக்கண்ணாடி வைத்து தேடி பார்த்தால் கூட கிடைக்காது போல், வரலாற்று பாதையில் நாம் எங்கு அதை தொலைத்தோம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன், உங்களுக்கு தெரிந்தால் எனக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன்.

செவ்வாய், 30 செப்டம்பர், 2008

கடவுள் தேவையில்லை

கடந்த சில மாதங்களாக ஒவ்வொரு நாளும், காலையில் எழுந்து செய்தித்தாளை எடுக்கும் பொழுதும், நேற்று எந்த ஒரு குண்டு வெடிப்போ, மதக்கலவரமோ நடந்திருக்க கூடாது என்ற ஒரு பதைப்பு மனதினில் எற்படுகிறது. இந்தியாவில், எங்கு பார்த்தாலும் மதத்தினை அடிப்படையாகக் கொண்ட பிரச்சனைகள், கொலைகள், கலவரங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன். நம் நாட்டின் "வேற்றுமையில் ஒற்றுமை" என்ற கோட்ப்பாடினையே இவை கேள்விக் குறியாக்கிவிட்டன்.

ஜூன் மாதத்தில் அமர்நாத் யாத்திரைக்கு, கஷ்மீர் மாநில அரசு நிலம் கொடுத்ததால் ஒரு பூதாகர பிரச்சனை வெடித்தது. கஷ்மீரும், ஜம்முவும் பிளவுப்பட்டன, மதத்தின் பெயரில் இந்துக்கள் தரப்பினிலிருந்தும், இஸ்லாமியர்கள் தரப்பினிலிருந்தும் இருந்த சமுக மற்றும் அரசியல் சக்திகள் ஆதாயம் தேடிக்கொள்ள முயன்றனே ஒழிய, உருப்படியாக ஒன்றும் செய்யவில்லை.மூன்று மாதங்களுக்கு மேல் நடந்த இந்த பிரச்சனையால் உயிர் சேதமும், பொருள் சேதமும், இயல்பு வாழ்க்கை நிலையும் பாதிக்கப்பட்டதான் மிச்சம்.

அடுத்ததாக ஒரிஸாவில், விஸ்வ ஹிந்து பரிஷத்தின் முக்கிய தலைவரான லஷ்மானந்தா சரஸ்வதி சுட்டுக்கொள்ளப்பட்டார். அக்கொலைக்கு மாவோயிஸ்ட்கள் பொருப்பேற்ற பின்னரும், இது போன்ற ஒரு தருனத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்து மதவாத சக்திகள் அங்கிருக்கும் கிறித்துப சிறுபான்மையினர் மீது ஒரு களியாட்டததில் இறங்கின. கலவரக்காரர்களை தடுக்க முயற்சி செய்த ஒரு 20 வயது பெண்ணை எரிந்துக்கொண்டிருந்த ஒரு கட்டிடத்தில் தூக்கிப் போடப்பட்ட சம்பவமொன்றே அந்த வெறியர்களின் மூர்கதனத்தை எடுத்தியம்புகிறது.

அது மட்டுமல்லாமல் கர்நாடகாவிலும் கிறித்துவர்களுக்கு எதிரான கலவரங்கள் நாட்டில் எங்கு பார்த்தாலும் மதத்தையை அடிப்படையாகக் கொண்ட பிரச்சனைகள் காளான்கள் போல் முலைத்துக் கொண்டிருக்கின்றன. இதுமட்டுமல்லாமல் தொடர் குண்டு வெடிப்புகள் நகரங்களில் நடந்துக் கொண்டிருக்கிறது.

மனிதா, இதுவா உனது மதம் உனக்கு போதித்துள்ளது. மனிதர்களை வதைக்க வேண்டுமென்றா கீதையும், கூரானும், பைபிலும் கூறியுள்ளது. ராமர், யேசு, அல்லா மற்ற பிற கடவுள்களும் நீங்கள் கூறும் நற்குணங்கள் இருக்குமாயின், இப்பொழுது அரங்கேறிக் கொண்டிருக்கும் செய்லகளை அனுமதித்திருப்பார்களா?

மனதினை சீர்திருத்தி, அவனது வாழ்க்கை செம்மையாக ஆக்குவதற்காக உருவாக்கப் பட்டவைத்தான் மதங்களும், கடவுளும். ஆனால் இன்று உலகெங்கும் நடக்கும் குண்டு வெடிப்புகளுக்கும், கலவரங்களுக்கும் மதமும், கடவுளும் ஒரு அடிப்படை காரணமாகிவிட்டன்.

காரல் மார்க்ஸ் "மதங்கள் சராசரி மனிதனின் போதைப் பொருள்" என்று சொன்னதில் ஒரு தவரும் இல்லை. பகுத்தறிவு(கவனிக்கவும் பகுத்தறிவு) இல்லாத மனிதனுக்கு, வாழ்க்கையின் மீது பிடிப்பு இல்லாத பொழுது அவனுக்கு நம்பிக்கை தருவதற்காகவே கடவுளும், மதங்களும் உருவாக்கப்பட்டன்.

இருப்பதாம் நூற்றாண்டில் விஞ்ஞானமும், ஏட்டுக்கல்வியும் முன்னேறி உள்ளதே ஒழிய, பகுத்தறிவில் மனிதன் மிகவும் பின் தங்கி உள்ளான். இன்று இருக்கும் பல பிரச்சனைக்களுக்கு அடிப்படை காரணம் மனிதனின் பிந்தங்கிய பகுத்தறிவு நிலையாகும்.

கடவுள் உண்டு என்பவரிடம் நான் சில கேள்விகளை கேட்கிறேன்

1. இந்த பெண்ணை கற்பழித்த பொழுது வழிபட்ட யேசு கிறுத்து அவளை என் காப்பாற்றவில்லை? அல்லது ராமரோ, கிருஷ்னரோ ஏன் அந்த மூர்கர்களை தடுத்து நிறுத்தவில்லை.

2. ஒருவர் விட்டு சென்ற பையை அவரிடம் கூடுக்க சென்ற சந்தோஷை, ஏன் ராமரோ, சிவனோ காப்பற்றவில்லை?

3. ஏன் தன்னை தரிசிக்க வந்த பக்தர்களையே, சாம்முண்டி தேவி காப்பாற்ற வில்லை?

நம்மையெல்லாம் ஒரு சக்தி உருவாக்கியிருக்கலாம், ஆனால் அந்த சக்தியால் இப்பொழுது எந்த ஒரு பயனும் இல்லை நண்பர்களே.

என்னை பொருத்தமட்டு, இப்படிப்பட்ட ஒரு கடவுள் தேவையில்லை.

திங்கள், 18 ஆகஸ்ட், 2008

செயல் படுவோமா

சென்ற வாரம், சுகந்திர தினத்தன்று சில வேலைகளை முன்னிட்டு சுமார் 50 கி.மீட்டர் பயனித்திட நேர்ந்தது. மூன்று ஆண்டுகளாக சென்னையில் வாகனம் ஓட்டி வரும் நான், இந்த சுகந்திர தினத்தைப் போல் அமைதியான ஒரு நாளை கண்டதில்லை, அமைதி என்றால் அப்படி ஒரு அமைதி. அன்றிரவு படிப்பதற்காக வெளிநாட்டிற்கு பயனிக்க இருந்த எனது தோழனை வழியனுப்பி வைப்பதற்காக பெங்களூர்க்கு இரயிலில் பயனித்தேன். எனது பெட்டியில் 23 இடங்கள் காலியாக இருந்ததை நினைத்து வருத்தமாக இருந்தது. சென்னை நகரமே அன்று முழுவதும் எதோ ஒரு துக்கத்தை அனுஷ்ட்டித்தது போல் இருந்தது.


இந்த அமைதிக்கெல்லாம் காரணம் சமீபத்தில் நாடு முழுவதும் நடந்த குண்டு வெடிப்புகள் என்பதை அறிந்த பொழுது கஷ்டமாக இருந்தது. சுகந்திர தினத்தன்று மக்கள் வெளிய வருவதற்கு அஞ்சும் நமது நாட்டின் நிலையை நினைக்க வெட்கமாவகவும், வருத்தமாகவும் இருந்தது.

சுகந்திரதிற்கு பிறகு, இந்த 61 ஆண்டு பயணத்தில் தூரம் பல கடந்துள்ளோம் என்பதை நான் மறுக்கவில்லை, இந்த பயணத்தில் பல சாதனைகள் படைத்துள்ளோம், பல சாகசங்கள் செய்துள்ளோம், ஆனாலும்.........

இன்று உலகமே நம்மை நோக்கி ஓடி வருவதிற்கு முக்கிய காரணம் நாம் உலகத்திலே ஒரு மிக பெரிய சந்தை என்பதற்காக என்பதை மறுத்தளக்கியலாது. கணினி துறையில் நாம் முன்னிலையில் இருப்பதின் காரணம் இந்திய ரூபாயின் நிலையே முதன்மையான காரனமே தவிர நமது அறிவு இல்லை என்பதும் ஒரு கசப்பான உண்மை.

மக்கள் தொகையே நமது பலம் என்று பலர் என்னிடம் சொல்வர், தோழனே அப்படியென்றால் ஏன் ஒலிம்பிக்ஸில் நாம் ஒரு தங்கம் மட்டுமே வெல்ல முடிந்தது? சோற்றிக்கு வழியில்லாதவன் எவ்வாறு விளையாட்டை பற்றி நினைக்க முடியுமென்று கேட்காதே எத்தியோப்பியாவிலும் வருமை இல்லையா? அவர்கள் நம்மை விட அதிக தங்ககள் வென்றுள்ளனரே?

சற்று நிதானமாக சிந்த்தித்தோமானால், சமுதாய நலத்தின் மீது அக்கரை இல்லாத நமது மெத்தனப் போக்கு நமது நிலமைக்கு ஒரு முக்கிய காரணம் என்பது புரியும்.

நமது நாட்டில் இருக்கும் பிரச்சனைகளுக்கு அரசியல்வாதிகளை மட்டுமே குற்றும் சொல்வது முட்டாள் தனம். முடியரசு காலத்தில் "அரசன் எவ்வழியோ, மக்களும் அவ்வழியே". ஆனால் மக்களாட்சியிலோ, "மக்கள் எவ்வழியோ, அரசும் அவ்வழியே". ஓட்டுப் போடுவது என்பது ஒவ்வொரு குடிமகனின் தலையாய கடமையாகும் ஒழிய, அத்துடன் நமது கடமை முடியவில்லை என்பதை உணர்ந்து செயல்பட்டிருந்தால் நாம் என்றோ ஒரு வளர்ந்த நாடாகியிருப்போம்.

கல்வி அறிவினை மக்களிடமும் எடுத்து செல்வதற்கு இக்காலத்து இளைஞர்கள் பலர் விழைந்து செயல்ப்பட்டு வருவது மகிழ்ச்சி அளித்தாலும், ஒரு நாடு முன்னேற்றம் அடைய அனைவரையும் வெரும் ஏட்டுக் கல்வி படித்தால் போதாது என்பதை நான் உணர்ந்து செயல்பட வேண்டும்.

செயல்படுவோமா?

புதன், 19 டிசம்பர், 2007

வாழ்வை ரசியுங்கள்

நேற்று கவப்பேரரசு வைரமுத்து அவர்களின் திருத்தி எழுதிய தீர்ப்புகள் புத்தக்த்தை படித்துக் கொண்டிருந்தேன். அதில் அந்தி என்ற தலைப்பில் வந்த ஒரு கவிதைப் படித்தேன், மிக அருமையாக இருந்து. அக்கவிதை இதுவே,

அந்தி

யாரங்கே?
ராத்திரி வரப்போகும்
ராச குமாரிக்கு
மேற்கு அம்மியிலே
மஞ்சள் அரைப்பது யார்?
இத்தனை நிறக்கோலம்
ஏனங்கே?

ஓ!
அது
இரவின் வாசலென்றா
இத்தனை அலங்காரம்?

என்ன அது?
தீயில் அங்கே
தேன்வடிகிறதா?

அங்கே
வழிந்தோடுவதெல்லாம்
வானத்துக்கு
ஒரு
பகலை பலிகொடுத்த
ரத்தமா?

இத்தனை
வர்ணப் புடவைகளைக்
கலைத்துப் போட்டும்.....
கடைசியில்
இரவு
கறுப்பைத்தானே
கட்டிக் கொள்கிறது?

நீலத் திரையில்
யாரோ
வரையக் கொண்டுவந்த
வர்ணக் கிண்ணம் -
சூரியனில் தடுக்கிச்
சிந்தி விட்டது!
ஆனால்.....
சிந்தியதெல்லாம்
சித்திரமானது!

புரிகிறது!
மரணப் படுக்கையில்
பகல்
புன்னகைக்கிறதோ?

விடைபெறும் சூரியன்
உள்ளங் கையை
உரக்க அசைக்கையில்..
தங்க மோதி்ரங்கள்
தகதகக்கின்றன்!

என் கிராமத்து சோதரி
ஒரு
கிழிந்த பாவாடைக்காரி
கேட்கிறாள்:

"இந்த வானமும் ஏன்
என்னைப் போல்
ஒட்டுப் போட்டு ஆடை
உடுத்துகிறது?"
- வைரமுத்து

இக்கவிதயை படித்தப்பின் மனதில் ஒரு சொல்ல முடியாத இன்பம். அதுவும் "இத்தனை வர்ணப் புடவைகளைக் கலைத்துப் போட்டும்..... கடைசியில் இரவு கறுப்பைத்தானே கட்டிக் கொள்கிறது?" என்ற வாக்கியத்தைப் படித்தவுடன வந்த பரவசம் இருக்கிறதே, எவ்வளவு தான் சோம பானம் அருந்தினாலும் இந்தப் பரவசத்தை அடைவது கடினம்.

தினசரி நடக்கும் ஒரு சம்பவத்தை, இப்படி பார்க்கும் கவிஞருக்கு எத்துனை கற்பனை வளம் இருக்கும் என்ற நினைப்பே, கவிஞரின் மீது எனக்கு அளவில்லா பொறாமையைத் தருகிறது.

" இந்த வானமும் ஏன் என்னைப் போல் ஒட்டுப் போட்டு ஆடை உடுத்துகிறது?", என்ற வாக்கியத்தின் முலம் சமுக பிரச்சனை ஒன்றை மிக நயமாக கூறி, நம்மை களிக்க செய்தது மட்டுமல்லாமல், சிந்திக்கவும் வைக்கிறார்.

சற்றே சிந்தியுங்கள், இந்த தகவல் தொழிற்நுட்ப காலத்தில் அதுவும் இணையமும், தொலைக்காட்ச்சியும் வந்த பின், எப்பொழுதெல்லாம் எவ்வளவு நேரம் சிந்திக்கிறோம்?

மிக சொற்பமான நேரமே அல்லவா?

ஒரு மனிதனின் வாழ்க்கை மேம்பட வேண்டுமானால், அவன் சிந்திக்க வேண்டும்? சிந்தனை எப்பொழுது எற்படும்?

நல்ல புத்தகத்தை படித்தால் மட்டுமா?

இல்லவே இல்லை, மனித மனம் இன்பமாக இருந்தாலே போதும், சிந்திக்க ஆரம்பித்து விடவோம்.

மனிதனுக்கு இன்பம் வர என்ன செய்ய வேண்டும், வாழ்க்கையை ரசிக்க வேண்டும். தயவு கூர்ந்து வெள்ளி திரையையும், சின்னத் திரையையும் மட்டுமே பார்காதீர்கள். அவை பொழுதுப் போக்கு சாதனங்கள்.

பொழுதை சிறிதளவேனும் நன்றாக பயன் படுத்துங்கள். நல்ல புத்தகங்கள் படியுங்கள், நல்ல பாடல்கள் கேளுங்கள். ஓவியம் வரைய ஆசையா, வரையுங்கள். இயற்கையை பருக வேண்டுமா? பூங்காவிற்கு செல்லுங்கள், கடற்கரைக்கு செல்லுங்கள்.

வாழ்க்கையில் ரசிக்க வேண்டியவை எவ்வளவோ இருக்கிறது, அவை நம்மைச் சுற்றி இருக்கிறது, நம் கண்களுக்குத் தான் தெரியவில்லை.

நான் வாழ்க்கையை அனுஅனுவாக ரசிக்கத் தொடங்கியது கல்லூரியில் தான், அதற்கு ஒரு முக்கிய காரணம் எனது தோழன் கனிப்பாண்டியன்.

பயனங்கள் முடிவதில்லை திரைப்படத்தில் இளைய நிலா என்றொரு பாடல், பல தடவை எல்லாரும் கேட்டிருப்போம். என் இதயத்தின் ராஜா, இளையராஜா மிக அருமையாக இசை அமைத்திருப்பார், அந்த இசையில் மயங்கி பாடல் வரிகளை, கனி சுட்டிகாட்டும் முன் ஒரு முறை கூட முழுதாகக் கேட்டதில்லை. அதில் ஒரு வரி வரும்
"முகிலினங்கள் அலைகிறதே,
முகவரிகள் தொலைந்தனவோ,
முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ, அது மழையோ",
இதைக் கேட்டப் பொழுது, என் வாழ்வில் ஒரு எல்லையில்லா பரவசத்தை அடைந்தேன், இன்றளவும் அப்பாடலை கேட்கும் பொழுதும் அதே பரவசம் தான். (கனிக்கு நன்றி).

சில மாதங்களுக்கு முன் Ratatouille என்ற ஒரு ஆங்கில படம் வந்ததது, உணவை எவ்வாறு ரசிக்க வேண்டும் என்று மிக அழகாகச் சொல்லி இருந்தார்கள், முடிந்தால் அப்படத்தைப் பாருங்கள்.

வாழ்க்கையை ரசியுங்கள், ரசித்தால் இன்பம் வரும். இன்பம் வந்தால் சிந்திப்போம், சிந்தித்தாத்தால் மனிதன் மேன்படுவான். இந்தியா அல்ல, உலகமே பூஞ்சோலையாக மாறும்.

வியாழன், 13 டிசம்பர், 2007

வேடிக்கை மனிதரை போலே - நாங்கள் வீழ்வோம் என்று நினைத்தாயோ!

தேடிச் சோறு நிதந்தின்று - பல

சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்

வாடித் துன்பமிக உழன்று - பிறர்

வாடப் பலசெயல்கள் செய்து - நரை

கூடிக் கிழப்பறுவம் எய்தி - கொடுங்

கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல

வேடிக்கை மனிதரை போலே - நான்

வீழ்வே நென்று நினைத்தாயோ!

- மகாகவி சுப்பிரமனிய பாரதி

மகாகவியின் இப்பாடலை ஒவ்வொரு முறை வாசிக்கும் பொழுதும், என்னுள் தூங்கிக்கொண்டிருக்கும் மனிதன் எழுகிறான். உடனே இவ்வுளகில் நடக்கும் அநீதிகளை தட்டிக்கேட்டக்க வேண்டும் என்றெண்ணம் பீறிட்டெழும், ஒரு சில மணிதுளிகள் எனது இரத்த நாளங்களில் செஞ்குரிதி காட்டாறு போல் ஓடும்.

இவ்வளவு பெரிய உலகத்தை நான் ஒரு தனி மனிதன் எவ்வாறு மாற்ற இயலும் என்றெண்ணம் மெதுவாக வரும். அதன் பிறகு வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதையாகி விடும்.

கடந்து 10 ஆண்டுகளில் நான் உணர்ந்த உண்மை, ஒரு மனிதன் தன்னுடைய இலக்கின் மீது உள்ள நோக்கை, தன்னார்வத்தை நிலையாக வைப்பது என்பது மிக கடினமான் செயலாகும். பெரியாரைப் போல், மார்க்ஸைப் போல், சே குவேராவைப் போல், அம்பெத்காரைப் போல் எனக்கு சிந்தினை திறனும், தொலை நோக்கு பார்வையும் இல்லை. ஆனால் அவர்களை போல், இவ்வுலகத்தில் நடக்கும் தவறான, தப்பான் செயல்களைக் கண்டு என்னால் அமைதி காக்கவும் முடியவில்லை. எனது நாகரிகம், பண்பாடு, எல்லாம் தொலைந்து போங்கட்டும், நமது வாழ்வை பார்ப்போம் என்றும் இருக்க முடியவில்லை.

பெரிதாக எதுவும் செய்யவில்லை என்றாலும், எழுதவாது செய்வோம் என்று எண்ணியே இந்த வலை பதிவை ஆரம்பிக்கிறேன். இதில், உலகத்தை பற்றி, அரசியல், நாகரிகம், மொழி, மாமனிதர்கள் என்று அனைத்தை பற்றியும் அலசுவோம் வாருங்கள்.